ADDED : ஆக 05, 2024 01:28 AM
நாடு முழுதும் வரும் 11ம் தேதி, முதுகலை படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
பல மாணவர்களுக்கு, அவர்களின் மாநிலத்தை விட்டு, வேறு மாநிலத்திலும், 700 கி.மீ., தாண்டியும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
கடந்த ஜூனில் நடக்கவிருந்த தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. பல தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஏற்கனவே தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதே தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க மீண்டும் விண்ணப்பித்தனர்.
நான்கு நகரங்களை தேர்வு செய்யும்படி, அவர்களை கேட்டுக் கொண்ட தேசிய தேர்வு வாரியம், அவற்றில் ஒன்று ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தது.
ஆனால், பல மாணவர்களுக்கு தேர்வு செய்த நகரங்களில் எதையும் ஒதுக்காமல், தொலைதுார தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு பல கி.மீ., பயணிக்க வேண்டிய நிலை இருந்தால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவர்.
எனவே, தேர்வு மைய ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நான்கு மையங்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும்.
- ராமதாஸ்
பா.ம.க., நிறுவனர்