போலி உயில் மூலம் நிலம் அபகரிப்பு உழவர்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலக செக்யூரிட்டி கைது
போலி உயில் மூலம் நிலம் அபகரிப்பு உழவர்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலக செக்யூரிட்டி கைது
ADDED : ஆக 31, 2024 02:14 AM

புதுச்சேரி: உழவர்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் உயில் புத்தகத்தை கிழித்து போலி ஆவணங்களை ஒட்டி, நிலங்களை அபகரித்த செக்யூரிட்டியை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நிலம், போலி ஆவணம் தயாரித்து அபகரித்த சம்பவத்தை தொடர்ந்து, பத்திரப்பதிவு துறையில் உள்ள உயில்களை மறு ஆய்வு செய்யப்பட்டது.
அதில், உழவர்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மட்டும் கடந்த 1980 முதல் 2001ம் ஆண்டு வரை 9 உயில்களை திருத்தி போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து உழவர்கரை சப்ரிஜிஸ்டர் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் முதல் உயிலை ஆய்வு செய்ததில், சாரம் கவிக்குயில் நகரில் 3,600 சதுர அடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சித்ரா கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சித்ரா மூலம் நிலத்தை விற்பனை செய்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை எம்.டி.எஸ்., ஊழியர் ரவிச்சந்திரன், 61: புரோக்கர்கள் சித்தானந்தம், 48; மஞ்சினி, 59; பத்திர எழுத்தர் மணிகண்டன்,48; ஆகியோர் கடந்த 22ம் தேதி, கைது செய்தனர்.
இவர்களில், மணிகண்டன், புரோக்கர்கள் சித்தானந்தம், மஞ்சினி ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில், உழவர்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலகத்திற்குள் சென்று உயில் ஆவணங்களில் உள்ள கைரேகை, கையொப்பம் தகவல்களை கிழித்து எரிந்து, போலி ஆவணங்களை ஒட்டிய, தனியார் நிறுவன செக்யூரிட்டி, ஏம்பலம் கம்பளிக்காரன்குப்பம் மாரியம்மன் கோவில் வீதி உத்திரவேலு, 55;வை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.