100 நாட்டுக்கோழி பண்ணைகளுக்கு மானியத்தில் 'இன்குபேட்டர் மிஷின்'
100 நாட்டுக்கோழி பண்ணைகளுக்கு மானியத்தில் 'இன்குபேட்டர் மிஷின்'
ADDED : மார் 05, 2025 05:22 AM
பொள்ளாச்சி ; தமிழகத்தில், நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முதன் முறையாக, 'இன்குபேட்டர் மிஷின்' வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை மேம்படுத்தவும், அதன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு வழிகாட்டவும், பல்வேறு சலுகைகளுடன், மானியமும் வழங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டில், 250 கோழிகளுடன் சிறிய அளவிலான பண்ணை அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது.
இதற்காக மாநிலத்தில், 100 பயனாளிகள், கால்நடைத்துறை வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதன்முறையாக, 50 சதவீத மானியத்தில், அடைக்காப்பான் என்ற 'இன்குபேட்டர் மிஷின்' தரப்பட்டுள்ளது.
கால்நடை துறையினர் கூறியதாவது:
கோழிகளை வளர்க்க கொட்டகை, உபகரணங்கள், தீவனத்தட்டு, நான்கு மாத தீவனம் என, ஒரு பண்ணை அமைக்க, 3 லட்சத்து, 13,750 ரூபாய் என மதிப்பிடப்பட்டது. இதில், 1 லட்சத்து 56,875 ரூபாய், அதாவது 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், உரிய தகுதி அடிப்படையில், 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு பயனாளிக்கும், நான்கு வார வயதில், 250 நாட்டுக்கோழி குஞ்சுகள், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.
முதன் முறையாக, 'இன்குபேட்டர் மிஷின்' 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக பயனாளிகள், நாட்டுக்கோழிகளின் இனவிருத்தியை பெருக்க முடியும். இறைச்சி, முட்டை விற்பனையை துரிதப்படுத்தி, அதிக லாபம் சம்பாதிக்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.