ADDED : மே 15, 2024 01:14 AM
சென்னை:பந்தல் காய்கறிகள் சாகுபடி திட்டத்திற்கு, மானியம் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வில், தோட்டக்கலைத் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு காய்கறி உற்பத்தி இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து, அவை விற்பனைக்கு வருகின்றன. சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், வெள்ளரி உள்ளிட்ட பந்தல் காய்கறிகளை சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கும்.
எனவே, வெள்ளை கற்கள் மற்றும் கம்பி வலையை பயன்படுத்தி, பந்தல் அமைக்க, தோட்டக்கலைத் துறை வாயிலாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, ஒரு ஏக்கருக்கு, 80,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு, 2.47 ஏக்கர் வரை மானியம் கிடைக்கும். இதற்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. கோடைக் காலம் முடிந்ததும், காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர். எனவே, அதற்குள் பந்தல் அமைக்கும் மானியத்தை வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
