போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி இழுத்தடிப்பு
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி இழுத்தடிப்பு
ADDED : செப் 17, 2024 12:07 AM

ராமநாதபுரம் : நீதிமன்றம் உத்தரவிட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பதால் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 5 சதவீதம் மட்டுமே அகவிலைப்படி வழங்க முடியும் என உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து கழகம் சார்பில் 7 முறை உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்தும் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாத போக்குவரத்து கழகம் மீது ஓய்வூதியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க மண்டல துணைச் செயலாளர் மணிக்கண்ணு கூறியதாவது:
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு ஊழியர்களுக்கு 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. தேவையற்ற கால தாமதம் செய்யாமல் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.