கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் திடீர் தர்ணா சர்வீஸ் ரோடு பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தல்
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் திடீர் தர்ணா சர்வீஸ் ரோடு பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 11, 2024 07:42 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி துவங்கியது. துாத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கபிபூர் ரகுமான் முன்னிலையில் நடந்தது. அப்போது, சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றாததைக் கண்டித்து ஐந்தாம் துாண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் சமூக ஆர்வலர்கள் பலர் ஜமாபந்தி அலுவலர் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சு நடத்திய அதிகாரிகள், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை, வழக்கை விரைந்து முடித்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறினர். அதை ஏற்றுக் கொள்ளாமல், ஜூன் 14 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கோவில்பட்டியில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மக்கள் அவதிப்படுவதால், சுரங்கப்பாதை அருகே சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என பல முறை வலியுறுத்தி உள்ளோம்.
சர்வீஸ் ரோடு அமைக்கும் பணிக்கு, வருவாய்த்துறையினரும், நகராட்சி துறையினரும் இணைந்து அளவீடு செய்து நிலம் கையகப்படுத்தினர். ரெயில் பாதை செல்லும் இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், முக்கியமாக மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் முகப்பு பகுதியில் உள்ள கடைகள் கையகப்படுத்தப்படவில்லை. இதனால், சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி தாமதப்படுகிறது. சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.