தெற்கில் கோடை மழை; வடக்கில் வெப்ப அலை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தெற்கில் கோடை மழை; வடக்கில் வெப்ப அலை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ADDED : ஏப் 30, 2024 10:12 PM
சென்னை,:'தென் மாவட்டங்களில் வரும், 3ம் தேதி வரை கோடை மழையும், வட மாவட்டங்களில் வெப்ப அலையும் நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், 16 இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
கோழிப்போர்விளை, மாஞ்சோலை, சுருளக்கோடு, 3; குழித்துறை, காக்காச்சி, முள்ளங்கினாவிளை, 2; சிற்றாறு, திற்பரப்பு, போடிநாயக்கனுார், களியல், விரகனுார், பெருஞ்சாணி உள்ளிட்ட இடங்களில், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், வரும், 3ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோரம் அல்லாத தமிழக உள்மாவட்டங்களில், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். கடலோரம் அல்லாத வடக்கு மாவட்டங்களில், 3ம் தேதி வரை, இயல்பு அளவை விட, 5 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் கூடுதலாக பதிவாகும். இந்த மாவட்டங்களில் சில இடங்களில், இன்று முதல், 3 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 இடங்களில் 108 டிகிரி பாரன்ஹீட்
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, வேலுார், திருப்பத்துார், ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில், 42 டிகிரி செல்ஷியஸ், 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
பாளையங்கோட்டை, 38; சென்னை மீனம்பாக்கம், 39; தர்மபுரி, கோவை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், திருத்தணி, 40; மதுரை விமானநிலையம், சேலம், திருச்சி, 41 டிகிரி செல்ஷியஸ் என, 15 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டியது.
கொடைக்கானல், 24; குன்னுார், 27; ஊட்டி, 29; துாத்துக்குடி, 35; கன்னியாகுமரி, நாகை, தொண்டி, 36; கடலுார், புதுச்சேரி, 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.