பிடிபட்ட பணம் யாருடையது: நயினார் நாகேந்திரனுக்கு 'சம்மன்'
பிடிபட்ட பணம் யாருடையது: நயினார் நாகேந்திரனுக்கு 'சம்மன்'
UPDATED : மே 30, 2024 05:44 AM
ADDED : மே 30, 2024 02:21 AM

சென்னை: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்த வழக்கில், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட நான்கு பேருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து, ஏப்., 6ல், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவுக்காரர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டதோடு, பா.ஜ., தொழில் பிரிவு செயலர் கோவர்த்தனன், அவருடைய டிரைவர் கணேஷ் உள்ளிட்டோரை போலீசார் விசாரித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் அடுத்தடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கனவே தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடமும் விசாரணை நடத்தப்பட்டதோடு, வீடும் சோதனையிடப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் நாளை ஆஜராக வேண்டும் என, நயினார் நாகேந்திரன், அவருடைய உதவியாளர் மணிகண்டன், பா.ஜ., அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன், கோவர்த்தனன் ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
இந்தப் பிரச்னைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அதனால் வழக்கில் எனக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கக் கூடாது என கேசவ விநாயகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது: நெல்லை ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய்க்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என, போலீஸ் விசாரணைக்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டார்.
அதேபோல, அந்தப் பணத்துக்கும் பா.ஜ.,வுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தன் தரப்பு விளக்கமாக சொல்லி விட்டார் கேசவ விநாயகன். பணம் யாருடையது. அதை அறியும் தீவிரத்தில் தான் விசாரணை குழுவினர் உள்ளனர்.
நயினார் மற்றும் கேசவ விநாயகன் இருவரிடமும் தீவிரமாக விசாரிக்கையில், பணம் யாருடையது என்பதை போலீஸ் கண்டறியும். அதன் பின், அந்த கோணத்தில் விசாரணை செல்லும் என்றனர்.