குட்கா முறைகேடு வழக்கு முன்னாள் அமைச்சர்கள் உள்பட 21 பேருக்கு 'சம்மன்'
குட்கா முறைகேடு வழக்கு முன்னாள் அமைச்சர்கள் உள்பட 21 பேருக்கு 'சம்மன்'
ADDED : ஆக 02, 2024 07:15 PM
சென்னை:குட்கா முறைகேடு வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், காவல் அதிகாரிகள் உள்பட, 21 பேருக்கு 'சம்மன்' அனுப்ப, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என, மொத்தம் 27 பேருக்கு எதிராக, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், ஏற்கனவே கிடங்கு உரிமையாளர்கள் மாதவ் ராவ் உள்பட ஆறு பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு விட்டது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக, கடந்த சில மாதங்களுக்கு முன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதால், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா முன், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாதவராவ் உள்பட ஐந்து பேர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 21 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை செப்.,9க்கு தள்ளிவைத்தார்.