பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: சென்னை போலீசிடம் சிக்கிய 3 பேர்
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு: சென்னை போலீசிடம் சிக்கிய 3 பேர்
ADDED : மே 25, 2024 01:49 AM

பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' என்ற பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் மூன்று பேரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன்; பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர். சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
'ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர்' இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவரது தந்தை அகமது மன்சூர் மற்றும் இளைய சகோதரர் அப்துல் ரகுமான்.
இவர்கள் சென்னை ராயப்பேட்டை ஜான்ஜானிகான் சாலையில், 'மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்' என்ற பெயரில், ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதன் வாயிலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர் இயக்க கொள்கைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்துள்ளனர்.
மேலும், 'டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்' என்ற,' யு டியூப்' சேனல் வாயிலாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்து உள்ளனர்.
இதை தீவிரமாக கண்காணித்து வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து மூவரையும் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:
சென்னை மாநகரத்துக்குள் இணையம் வாயிலாக, என்ன மாதிரியான குற்றங்கள் நிகழ்கின்றன என்பதை கண்காணித்து, சமூகத்தினரிடையே மோதல் ஏற்படுத்தும்படியான கருத்து, சமூக விரோத கருத்து குறித்த பதிவு போட்டிருந்தால், அது தொடர்பான தகவலை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு உள்ளது.
அப்படி கண்காணிக்கும் போது, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் (விடுதலை கட்சி) என்ற சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் அமைப்பின் கொள்கைகளை பரப்பும் செயலில் ஹமீது உசேன் உள்ளிட்ட மூன்று பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
உலகம் முழுதும், 'கிலாபத்' என்ற இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வருவதே ஹஸ்ப் உத் தஹ்ரீர் இயக்கத்தின் நோக்கம். இது, 1953ம் ஆண்டு ஜோர்டான் நாட்டில் நிறுவப்பட்டது.
துருக்கி நாட்டில், அந்நாட்டின் பார்லிமென்டான, 'கிராண்ட் நேஷனல் அசெம்பிளி'யின் உத்தரவு வாயிலாக, 1924 மார்ச் 3ம் தேதி ஒட்டோமான் காலிபா ஆட்சி என்ற இஸ்லாமிய ஆட்சி முடிவிற்கு வந்தது.
அதன் நுாறாவது ஆண்டு தற்போது நிறைவு பெறும் இந்த நேரத்தில், மீண்டும் கலிபா ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதே, ஹிஸ்ப் உத் தஹ்ரீர் இயக்கத்தின் பிரதான நோக்கம்.
ஹமீது உசேன் உள்ளிட்ட மூன்று பேரும் பரப்பும் கருத்துக்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமானது என்பதால், அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.

