கெஜ்ரிவால் மீதான அடக்கு முறை 'இண்டியா' கூட்டணியை மேலும் வலிமைப்படுத்தி உள்ளது ஈரோடு பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கெஜ்ரிவால் மீதான அடக்கு முறை 'இண்டியா' கூட்டணியை மேலும் வலிமைப்படுத்தி உள்ளது ஈரோடு பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : ஏப் 01, 2024 02:35 AM

ஈரோடு: ஈரோடு, நாமக்கல், கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு அருகே சின்னியம்பாளையத்தில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இத்தேர்தல், நாடு காக்கும் ஜனநாயக போர்க்களாமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதால், நான் செல்லும் இடங்களில் மக்களின் வரவேற்பை பார்க்கிறேன்.
இதை பொறுக்க முடியாத அ.தி.மு.க., - பா.ஜ.,வினர், இந்த அரசின் நலத்திட்டங்களை குறை சொல்கின்றனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை செய்து முடித்துள்ளோம்.
தமிழக மக்கள், தி.மு.க., ஆட்சியின் ஏதாவது ஒரு திட்டத்திலாவது பயன் பெற்றிருப்பர். அரசு திட்டங்களில் குறை இருந்தால் சொல்லுங்கள்; செம்மைப்படுத்துகிறோம்.
தமிழகத்தில் தொழில் துறை முன்னேற்றம், அதன் வாயிலாக வேலைவாய்ப்பை உயர்த்த முயல்கிறோம். 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட முயற்சிக்கிறோம்.
அதேநேரம், அ.தி.மு.க., கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் உணர்வர். பா.ஜ.,வினரும், கருப்பு பணம் ஒழிக்கப்படும்; 15 லட்சம் ரூபாய் மக்களுக்கு வழங்கப்படும்; ஆண்டுக்கு, 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என, பல வாக்குறுதிகளை வழங்கி, எதையும் நிறைவேற்றவில்லை.
மாறாக, உலக அளவில் மிகப்பெரிய ஊழலான தேர்தல் பத்திர முறைகேட்டை, 8,000 கோடி ரூபாயில் செயல்படுத்தி உள்ளனர். பி.எம்.கேர் பண்டில் முறைகேடு நடந்துள்ளது.
சி.ஏ.ஜி., அறிக்கையில், 7 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், இந்த ஊழல்கள் வெட்ட வெளிச்சமாக்கப்படும். யார் யார் கம்பி எண்ணப் போகின்றனர் என பார்ப்போம்.
தொழில் வளம் மிக்க தமிழகத்தின் மேற்கு மண்டலம், பா.ஜ., ஆட்சியால் இன்னல்களை சந்திக்கிறது. பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் தொழில் துறையை மூடிவிடுவர்.
அவர்களுக்கு நெருக்கமான சிலர் மட்டும் தொழில், வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டனர்.
இதை பற்றி எல்லாம் பழனிசாமி பேசுவதில்லை. 'கூட்டணியில் இருந்ததால், பா.ஜ.,வை விமர்சிக்க மாட்டோம்' என்கிறார். அவரால் பிரதமர், அமித் ஷா, கவர்னரை விமர்சிக்க முடியாது.
ஏனென்றால், அது எஜமான விசுவாசம். பதவி சுகத்துக்காகவும், ஊழல் வழக்கில் தப்பிக்கவும், மக்கள் விரோத திட்டங்களை பழனிசாமி ஆதரிக்கிறார்.
குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநில உரிமை பேசிய மோடி, பிரதமரானதும் மாநிலங்களை அழிக்க துடிக்கிறார். சிலிண்டர் விலையை குறைப்பது, தேர்தல் பத்திர ஊழல் வாயிலாக பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது.
கெஜ்ரிவால் மீதான அடக்கு முறை, இண்டியா கூட்டணியை மேலும் வலிமைப்படுத்தி உள்ளது. அடக்கு முறை எப்போதும் வெல்லாது என்பதை பா.ஜ.,விற்கு உணர்த்தும் தேர்தலாக இது அமையும்.
மக்கள் விரோத, பா.ஜ., ஆட்சியை வீழ்த்தும் நாளாக ஜூன் 4 அமையட்டும். இந்தியாவின் இரண்டாம் விடுதலை நாளாக வரலாற்றில் பதியட்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

