உச்ச நீதிமன்றம் ஜாமின் ரத்து: என்.ஐ.ஏ., ஆபீசில் 8 பேர் சரண்
உச்ச நீதிமன்றம் ஜாமின் ரத்து: என்.ஐ.ஏ., ஆபீசில் 8 பேர் சரண்
ADDED : மே 24, 2024 04:18 AM
சென்னை: உச்ச நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்துவிட்டதால், தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., எனும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பை சேர்ந்த எட்டு பேர், சென்னையில் என்.ஐ.ஏ., அலுவலகத்தில் சரணடைந்தனர்.
நாடு முழுதும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினர், சட்ட விரோத செயலில் ஈடுபடுகின்றனர்.
ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி வருவது தெரியவந்தது. இதையடுத்து, 2022ல், அந்த அமைப்பிற்கு, மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து, தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்களில், பி.எப்.ஐ., நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில், தமிழகத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களில், மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பரக்கத்துல்லா, இத்ரிஸ், முகமது அபுதாஹிர், காலித் முகமது, சையது இசாக், காஜா மொய்தீன், யாசர் அராபத், பயாஸ் அகமது ஆகிய எட்டு பேருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், 2023, அக்டோபரில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இது நேற்று முன்தினம், நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றத்தின் தன்மையை பார்க்கும்போது, எட்டு பேருக்கும், சென்னை உயர் நீதிமன்றம் கனிவு காட்டியிருக்கக் கூடாது.
அவர்களுக்கு சட்டவிரோத செயலில் தொடர்பு இருப்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனால், எட்டு பேரின் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து, அந்த எட்டு பேரும், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ., அலுவலகத்தில் நேற்று சரணடைந்தனர்.