அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு ஓ.கே., சொன்னது சுப்ரீம் கோர்ட்
அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு ஓ.கே., சொன்னது சுப்ரீம் கோர்ட்
UPDATED : ஆக 02, 2024 01:20 AM
ADDED : ஆக 02, 2024 01:12 AM
புதுடில்லி,:எஸ்.சி., எனப்படும் பட்டியலின பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள்இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
இதன் வாயிலாக, தமிழகத்தில் அருந்ததியினருக்கு, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 2009ம் ஆண்டு சட்டம் செல்லும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பட்டியலின பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. 2008ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு, இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தது.
அதன்படி மாநிலத்தில், பட்டியலின பிரிவினருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க முடிவானது.
இதற்கான சட்டம் 2009ல் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, 2009ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, சேலத்தைச் சேர்ந்த யசோதா என்பவர் 2015ல் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு, 2011 முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்
இருந்தது. மேலும், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இது போன்ற பிரச்னை தொடர்புடைய, 2-0க்கும் மேற்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. அத்துடன், தமிழகம் தொடர்பான வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டது.
வழங்க முடியாது
முன்னதாக இட ஒதுக்கீடு தொடர்பாக, 2004ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்திருந்தது. இ.வி.சின்னய்யா மற்றும் ஆந்திர அரசு இடையேயான அந்த வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. 'எஸ்.சி., - எஸ்.டி., யினர், ஒரே குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களே. இதில், ஜாதியின் அடிப்படையில் துணைப்பிரிவுகள் உருவாக்க முடியாது. அதனால், ஜாதியினருக்கு ஏற்ப உள் இட ஒதுக்கீடு வழங்கவும் முடியாது' என்று, அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இதற்கிடையே, பஞ்சாபில் எஸ்.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில், வால்மீகி மற்றும் மசாபி சீக்கியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கி, 2006ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், அந்த அரசாணைக்கு தடை விதித்து, 2010ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இதில், அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கும் அடங்கும்.இந்த வழக்குகளை ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற, ஐந்து நீதிபதிகள் அமர்வு 2020ல் பரிந்துரைத்தது.
ஒத்திவைப்பு
அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. கடந்த பிப்ரவரியில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்த அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில், ஆறு நீதிபதிகள் ஒரே மாதிரியான உத்தரவை வழங்கினர். மற்றொரு நீதிபதி பீலா திரிவேதி மாறுபட்ட உத்தரவு பிறப்பித்தார். பெரும்பான்மை நீதிபதிகள் உத்தரவின்படி, எஸ்.சி., பிரிவில் உள்இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:எஸ்.சி., பிரிவில் மிகவும் பின்தங்கியுள்ள பிரிவினருக்கும், இட ஒதுக்கீட்டில் பலன் கிடைக்க வேண்டும். அதற்கேற்ப அவர்களை அடையாளம் கண்டு, உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அதே நேரத்தில் 100 சதவீதத்தையும், ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு வழங்க முடியாது. குறிப்பிட்ட ஜாதியினருக்கு, இட ஒதுக்கீட்டில் பலன் முறையாக கிடைக்கவில்லை என்பதற்கான முழு தகவல்கள் மற்றும் புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே, உள்இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
வரலாற்று ஆதாரங்கள்
உச்ச நீதிமன்றத்தின் 2005 தீர்ப்பு குறித்து இரண்டு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முதலில், இட ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா? இரண்டாவது, 394வது பிரிவின்படி எஸ்.சி., என்பது ஒரு குறிப்பிட்ட குழுவா அல்லது பல தரப்பட்ட ஜாதிகளாக அதை பிரித்து பார்க்கலாமா என்பதே.வரலாற்று ஆதாரங்கள் மற்றும் பலதரப்பில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்களின்படி, எஸ்.சி., என்பது, ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்ல. அது, பலதரப்பு ஜாதிகள் அடங்கிய பிரிவே என்பது உறுதியாகிறது. அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16வது பிரிவுகள், ஒரு ஜாதியை உட்பிரிவாக பிரிப்பதில் மாநிலங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.அதே நேரத்தில், உட்பிரிவுகள் உருவாக்குவதை, மாநில அரசுகள் தங்கள் இஷ்டம் போலவும், அரசியல் காரணங்களுக்காகவும் செய்ய முடியாது. அது தொடர்பாக முழுமையான புள்ளி விபரங்கள், தகவல்கள் இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட நேரிடும்.
ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கான இட ஒதுக்கீட்டால், அதிலுள்ள குறிப்பிட்ட சில ஜாதியினர் மட்டுமே பலனடைகின்றனர். அவர்கள் மற்றவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்கவிடாமல் தடுக்கின்றனர். அதனால், எஸ்.சி., பிரிவில் உண்மையில் மிகவும் பின்தங்கியுள்ளவர்களுக்கு, இட ஒதுக்கீட்டில் பலன் கிடைக்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
நடைமுறைக்கு வரும்
ஆனால், உள் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு, நீதிபதி பீலா திரிவேதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தின் 341வது பிரிவை திருத்த, மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை. எஸ்.சி., பிரிவில் எந்தெந்த ஜாதிகள் இடம் பெற வேண்டும் என்பதை, ஜனாதிபதி மட்டுமே முடிவு செய்ய முடியும் என, அவர் தன் உத்தரவில் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், 2009ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் வாயிலாக, அருந்ததியினருக்கான 3 சதவீதம் உள் ஒதுக்கீடு தற்போது நடைமுறைக்கு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது, அந்தப் பிரிவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
இட ஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் தேவை
உள் இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை உத்தரவில், மேலும் சில முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பான்மை தீர்ப்பு அளித்த ஆறு நீதிபதிகளில் நான்கு பேர், இடஒதுக்கீடு பிரிவில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு அதாவது, கிரீமிலேயருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
கிரீமிலேயர் முறை
தற்போது, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் முறை உள்ளது. அதுபோல, எஸ்.சி., பிரிவிலும் கிரீமிலேயர் முறையை செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, இடஒதுக்கீட்டின் பலன் தரப்பட வேண்டும். அதன் வாயிலாக அவர்களுடைய வாழ்க்கை எந்தளவுக்கு மேம்பட்டுள்ளது என்பதை மாநில அரசுகள் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு தலைமுறைக்கு மட்டும் இடஒதுக்கீட்டின் பலன் அளித்தால், அந்த குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சமூக நீதி
எஸ்.சி., பிரிவினர் என்பதாலேயே இட ஒதுக்கீடு வழங்காமல், அந்தப் பிரிவில் உள்ள யாருக்கு இது தேவை என்பதை கண்டறிந்து செயல்படுத்துவதே, சமூக நீதியை உறுதிப்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது. அதே நேரத்தில், ஒரு சிறிய கிராமத்தில் உள்ள அதே பிரிவைச் சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவனுக்கு இந்தப் பலன் கிடைப்பதுஇல்லை. குறிப்பிட்ட பிரிவிலேயே இந்தப் பாகுபாடு உள்ளது, இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதாக இல்லை. அதனால், இட ஒதுக்கீட்டு கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் அமர்வு கூறியுள்ளது.
பட்டியலினத்தவருக்கு சமூக நீதி வழங்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் பட்டியலின, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
கிரீமிலேயர்களை அடையாளம் காண்பதற்கான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிரீமிலேயர் முறை புகுத்தப்பட்டால், அது பட்டியலினத்தவருக்கு சமூக நீதியை மறுப்பதற்கான கருவியாக அமைந்து விடும். எனவே, பட்டியலின, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை கொண்டு வரும் ஆபத்தான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடக்கூடாது.
-ராமதாஸ்
பா.ம.க., நிறுவனர்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முதல்வர் மகிழ்ச்சி
அருந்ததியர் சமுதாயத்திற்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்து தீர்ப்பளித்திருப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நம் பயணத்துக்கான மற்றொரு அங்கீகாரமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துஉள்ளது. முறையாக குழு அமைத்து, அதன் வழியே திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாக வைத்து, அருந்ததியர் சமுதாயத்திற்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டை கருணாநிதி கொடுத்தார். அதற்கான சட்ட முன்வடிவை சட்டசபையில் நான் அறிமுகம் செய்தேன். அதை நிறைவேற்றி தந்தோம்.
இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இடஒதுக்கீடு விபரம்
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதன் விபரம்:
பிற்படுத்தப்பட்டோர் - 30
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20
பட்டியலினத்தவர் - 18
பழங்குடியினர் - 1
* பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம்; எஸ்.சி., பிரிவில் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.