ADDED : பிப் 25, 2025 05:45 AM

சிவகங்கை : 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போலீஸ்காரர், கண்மாயில் மர்மமாக இறந்து கிடந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை, பிள்ளைவயல் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசோக், 41; மதுரை, ஜெய்ஹிந்த்புரம் ஸ்டேஷனில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்தார். திருமணமாகி, 9 வயதில் பெண் குழந்தை உள்ளது.
மனைவியை பிரிந்து வாழும் இவர், சில மாதங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். இதனால் சிவகங்கையில் தாயுடன் வசித்தார்.
நேற்று முன்தினம், தொண்டி ரோட்டில் பிள்ளைவயல்காளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள கண்மாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.