பயிர் சர்வேக்கு ‛டேப்லெட்', மதிப்பூதியம் இல்லை: வி.ஏ.ஓ.,க்கள் போராட முடிவு
பயிர் சர்வேக்கு ‛டேப்லெட்', மதிப்பூதியம் இல்லை: வி.ஏ.ஓ.,க்கள் போராட முடிவு
ADDED : செப் 04, 2024 01:32 AM
சிவகங்கை : டிஜிட்டல் பயிர் சர்வேக்கு 'டேப்லெட்', மதிப்பூதியம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு வி.ஏ.ஓ.,சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 12, 650 வருவாய் கிராமத்தின் கீழ் 11 ஆயிரம் வி.ஏ.ஓ.,க்கள் பணிபுரிகின்றனர். பயிரிடப்படும் பயிர் விபரங்களை சர்வே எண், நிலங்களின் தன்மை விபரப்படி அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக வி.ஏ.ஓ.,விற்கு 'டேப்லெட்', கிராம இளைஞர், சர்வே எண்ணுக்கு ரூ.10 மதிப்பூதியம் வழங்குவதாக தெரிவித்தது. ஆண்டிற்கு 3 முறை 'டிஜிடல் பயிர் சர்வே' எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான உபகரணம், மதிப்பூதியத்தை அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில், முதற்கட்டமாக வி.ஏ.ஓ.,க்கள் ஆக., 15 முதல் 19 வரை அலைபேசி மூலம் பயிர் சாகுபடி குறித்த சர்வே விபரங்களை சேகரித்தனர். இதில், பெரும் பிரச்னை ஏற்பட்டது.
இதனால், 'டேப்லெட்', மதிப்பூதியம் வழங்கும் வரை சர்வே பணியை புறக்கணிக்க வி.ஏ.ஓ.,க்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து வி.ஏ.ஓ.,சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.அருள்ராஜ் கூறியதாவது:
இப்பணிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.400 கோடி வரை ஒதுக்கியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கிராமத்திற்கு ஒரு இளைஞரை வழங்கி, 'டேப்லெட்', மதிப்பூதியத்துடன் வி.ஏ.ஓ.,க்களை சர்வே எடுக்க கூறியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இது வரை வழங்கவில்லை.
இதை கண்டித்து செப்., 9 ல் தாசில்தார் அலுவலகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது, செப்., 17 ல் கோட்டாட்சியர் அலுவலகம் முன், செப்., 30 ல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.