ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு
ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு
ADDED : மே 31, 2024 11:13 PM

தேனி, : பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாசில்தார் காதர்ஷெரிப்பை 48, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மதுரை ஆரப்பாளையம் கஸ்துாரிபாய்நகரைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி சுப்பிரமணியம் 57. இவரது சொந்த ஊர் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி. இவருக்கு சொந்தமான நிலத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று கோரி விண்ணப்பித்தார்.
இவரது மனு ஆண்டிபட்டி தாசில்தார் காதர்ஷெரீப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டது. தாசில்தார் சான்று வழங்காமல் அலைகழித்தார். பின் மே 25ல் நிலத்தை ஆய்வு செய்தார். பின் தடையில்லா சான்று வழங்க ரூ.ஒரு லட்சம் லஞ்சம் தரும்படி கேட்டார்.
சுப்பிரமணியம் தாசில்தார் மீது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுந்தரராஜனிடம் புகார் அளித்தார். மே 28 மாலை ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச பணத்தை வாங்கிய தாசில்தாரை போலீசார் பிடித்தனர். விசாரணையின் போது நெஞ்சுவலிப்பாதாக தாசில்தார் தெரிவித்தார்.
அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்று தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மே 29 அவர் குணமடைந்ததால் தேனி தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா முன்னிலையில் காதர்ெஷரீப் ஆஜர்படுத்தப்பட்டார். பின் சிறை நிர்வாகம் சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று அவர் முழு குணமடைந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார்.

