'சீர்காழி கோவில் நிலம் 200 ஏக்கர் விற்பனை மீது நடவடிக்கை எடுங்கள்'
'சீர்காழி கோவில் நிலம் 200 ஏக்கர் விற்பனை மீது நடவடிக்கை எடுங்கள்'
ADDED : செப் 05, 2024 12:14 AM
சென்னை:மயிலாடுதுறையை சேர்ந்த தமிழக ஹிந்து சைவ கோவில்கள் பாதுகாப்பு மற்றும் தெய்வநெறி பரப்பும் சங்க செயலர் பாலசுப்ரமணியன் தாக்கல் செய்த மனு:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், சட்டநாதசுவாமி கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில், துவக்கத்தில் சோழ பேரரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது, தருமபுர ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமாக, 500 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் குத்தகை வாயிலாக, மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைத்து வந்தது. உரிய அனுமதியின்றி, கோவிலுக்கு சொந்தமான, 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் விற்கப்பட்டுள்ளன.
அதேபோல, இக்கோவிலின் கண்காணிப்பாளர், தருமபுர ஆதீனத்துடன் இணைந்து, 8 ஏக்கர் நிலத்தை தனிநபர்களுக்கு மாற்றியுள்ளனர். உரிய அனுமதியின்றி, சதுப்பு நிலத்தை மாற்றம் செய்தது சட்டவிரோதம். இதுகுறித்து, புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்பதோடு, நிலத்தை மாற்றம் செய்து விற்றதை செல்லாது என அறிவிக்கவும், இது தொடர்பான புகார் மனுவை பரிசீலிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ''மனுதாரரின் புகார் மனுவை பரிசீலித்து, சட்டத்துக்கு உட்பட்டு, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.