தமிழ் படங்கள் திரையிடக்கூடாது வாட்டாள் நாகராஜ் திடீர் போர்க்கொடி
தமிழ் படங்கள் திரையிடக்கூடாது வாட்டாள் நாகராஜ் திடீர் போர்க்கொடி
ADDED : மார் 09, 2025 01:22 AM

ஓசூர்: ''மேகதாதுவில் அணை கட்ட ஆட்சேபனை இல்லை என, தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். முதற்கட்டமாக, கர்நாடகாவில் தமிழ்ப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்,'' என, வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார். இது கர்நாடக-தமிழக எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அச்சமின்றி
வேலுார் மாவட்டம், காட்பாடியில், நேற்று முன்தினம் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ''மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது.
சட்டமும் நியாயமும் நம் பக்கம் இருக்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் யாரும் எதுவும் செய்ய முடியாது. தமிழக விவசாயிகளும் மக்களும் அச்சமின்றி இருக்கலாம்,'' எனக் கூறியிருந்தார். இந்த பேட்டி, கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.
அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட அமைப்புகள் கொந்தளிக்கின்றன. போராடவும் தயாராகி உள்ளன.
முதற்கட்டமாக, மேகதாதுவில் அணைகட்ட விடாமல் தடுக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், கலசா - பந்துரி மகாதாய் யோஜனா திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கன்னட செலுவளி, கன்னட சேனா, ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய கன்னட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தி உள்ளனர்.
வாட்டாள் நாகராஜ் தலைமையில், அக்கூட்டமைப்பினர், கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி ஆர்ச் அருகே தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மதியம் ஒன்று திரண்டனர். பின், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கைது நடவடிக்கை
தொடர்ந்து, தமிழக எல்லைக்குள் புக முயன்ற கூட்டமைப்பினரை, அத்திப்பள்ளி போலீசார் தடுத்தனர். மீறி, உள்ளே வர முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, வாட்டாள் நாகராஜ் அளித்த பேட்டி:
மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ள ஆட்சேபனை எதுவும் இல்லை என தமிழக அரசு ஒரு மாத காலத்துக்குள் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
முதற்கட்டமாக, கர்நாடகாவில் எந்த தியேட்டரிலும், தமிழ் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம். கர்நாடகாவின் பொம்மசந்திராவில் இருந்து, ஓசூருக்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்க விட மாட்டோம். ஓசூரில் விமான நிலையம் வர விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், கர்நாடகாவில் வரும் 22ல், மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.