தமிழகத்தை செல்வம் கொழிக்கும் மாநிலமாக மாற்றலாம்: அமைச்சர் வேலு நம்பிக்கை
தமிழகத்தை செல்வம் கொழிக்கும் மாநிலமாக மாற்றலாம்: அமைச்சர் வேலு நம்பிக்கை
ADDED : மார் 06, 2025 01:34 AM
சென்னை: ''தமிழகத்தை செல்வம் கொழிக்கும் மாநிலமாக மாற்ற, நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைவரும் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்,'' என, அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
தமிழக பொருளாதாரத்தை, ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவதில், நெடுஞ்சாலைத் துறை பங்களிப்பு தொடர்பான கருத்தரங்கம், சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்தது.
அதில், அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தமிழகத்தின் மொத்த உற்பத்தியை, 2030ம் ஆண்டுக்குள், 83.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க, முதல்வர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.
ஈடுபாட்டுடன் பணி
மாநிலத்தின் வளர்ச்சிக்கு, நெடுஞ்சாலைத் துறை மிகப்பெரிய பங்களிப்பை தருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்த உற்பத்தி, 30 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதை மூன்று மடங்கு உயர்த்தினால், இலக்கை அடையலாம். தமிழகத்தை செல்வம் கொழிக்கும் மாநிலமாக, எளிதாக மாற்றலாம். எனவே, முதல்வரின் இலக்கை அடைவதற்கு நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைவரும் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்.
நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி தான், மாநில பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. நல்ல சாலைகளால், போக்குவரத்து எளிதாகிறது; சுற்றியுள்ள பகுதிகள் வளர்ந்து பொருளாதாரம் உயர்கிறது. மாநில வளர்ச்சிக்கு, சாலை கட்டமைப்பு மிகவும் முக்கியமானது.
தமிழகத்தில் சாலைகள் நன்றாக உள்ளதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தமிழகம் வந்து முதலீடு செய்கின்றனர். உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த, சாலைகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே, 77 மீட்டர் கண்ணாடி பாலம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு பொது மக்கள் செல்வதற்கு தகுந்த படகு போக்குவரத்து இல்லை. எனவே, புதிதாக மூன்று படகுகள் வாங்கப்பட உள்ளன. சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி உதவும் முயற்சிகளில் ஒன்றாக இது அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ், திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன், முதன்மை இயக்குநர் செல்வதுரை, சிறப்பு அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.