'கோட்டா' கேட்டு எம்.பி.,க்கள் போர்க்கொடி தமிழக காங்., நிர்வாகிகள் நியமனத்தில் இழுபறி
'கோட்டா' கேட்டு எம்.பி.,க்கள் போர்க்கொடி தமிழக காங்., நிர்வாகிகள் நியமனத்தில் இழுபறி
ADDED : ஆக 10, 2024 02:49 AM
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் நியமனத்தில் பங்கு கேட்டு, எம்.பி.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளதால், பட்டியல் வெளியீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதும், மகளிர் பிரிவு, ஊடகப்பிரிவு உள்ளிட்ட அணிகளுக்கு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதையடுத்து, முன்னாள் தலைவர் அழகிரியால் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களில் சிலர் சரிவர செயல்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், மாநிலம் முழுதும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார் செல்வப்பெருந்தகை. சின்ன சேலம், தென் சென்னை, வட சென்னை கிழக்கு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மட்டும், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆக., 15ம் தேதிக்குள் மீதமுள்ள மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி, நிர்வாகிகள் பட்டியலுடன் மீண்டும் டில்லி செல்ல செல்வப்பெருந்தகை திட்டமிட்டுள்ளார்.
கட்சியில் மொத்தமுள்ள, 77 மாவட்டத் தலைவர்களில், கொலை செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஜெயகுமார் உட்பட, 8 மாவட்ட தலைவர் பதவிகள் காலியாகவுள்ளன. மேலும், இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டத் தலைவர் என, 117 பேரை நியமிக்கும் திட்டமும் உள்ளது.
கடந்த 2022ல் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கிற மாவட்ட தலைவர்களை மாற்ற வேண்டும். 50 வயதுக்கு கீழே உள்ளோருக்கு, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர் பதவிகளில் 50 சதவீதம் அளிக்கப்பட வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையிலும் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என, மாநில நிர்வாகிகள் சிலர், செல்வப்பெருந்தகையிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையில் சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், அழகிரி, சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார் உள்ளிட்டோரிடம், ஆதரவாளர் பட்டியலையும் மாநில தலைமை கேட்டுள்ளது. ஆக., 20ம் தேதி ராஜிவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்து, 23ம் தேதி செல்வப்பெருந்தகை, பட்டியலுடன் டில்லி செல்கிறார்.
இந்த தகவல் தெரிய வந்ததும், நிர்வாகிகள் நியமனத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என எம்.பி.,க்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
மாணிக்தாகூர், கார்த்தி, விஷ்ணுபிரசாத், சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு பதவி பெற்று தருவதில் ஆர்வமாக உள்ளனர்.
குறிப்பாக, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில், தங்களூடைய ஆதரவாளர்களே இடம் பெற வேண்டும் என நினைக்கின்றனர். வட்டாரத் தலைவர் பொறுப்பிலும் ஆதரவாளர்களை நியமிக்க முயற்சிக்கின்றனர்.
ஒரு எம்.பி.,க்கு மாநில, மாவட்ட பொறுப்புகளில் இத்தனை பதவிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுப்பதால், நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -