'எங்களை ரொம்ப பாராட்டுறாங்க தமிழக கல்வித்துறை பெருமிதம்'
'எங்களை ரொம்ப பாராட்டுறாங்க தமிழக கல்வித்துறை பெருமிதம்'
ADDED : செப் 10, 2024 10:55 PM
சென்னை:'மத்திய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட, தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள செய்திகள், தமிழகத்தின் பெருமையை மேலும் உயர்த்தி உள்ளன.
இது, உயர்கல்வியில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதை தெளிவாகக் காட்டுகிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்ட அறிக்கை:
பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், கல்லுாரி மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவற்றால், கல்வித்தரத்தில் தமிழகம், இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது.
டில்லியில் கடந்த மாதம் 13ம் தேதி, மத்திய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள செய்திகள், தமிழகத்தின் பெருமையை மேலும் உயர்த்தி உள்ளன.
தேசிய அளவில் தரவரிசைப்படுத்தப்பட்ட, 926 கல்லுாரிகளில், தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரிகள் 165. அடுத்த நிலைகளில் டில்லி 88, மஹாராஷ்டிரா 80, கர்நாடகா 78, உத்தர பிரதேசத்தில் 71 என உள்ளன. இது, உயர்கல்வியில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதைக் காட்டுகிறது.
காலை உணவு உட்பட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் பயனாக, அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவ - மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித்தரத்தில், இந்தியாவில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.