சென்னை சிக்னல்களில் நிழற்பந்தல் புதுச்சேரியை பின்பற்றுகிறது தமிழகம்
சென்னை சிக்னல்களில் நிழற்பந்தல் புதுச்சேரியை பின்பற்றுகிறது தமிழகம்
ADDED : மே 03, 2024 01:40 AM

சென்னை:சுட்டெரிக்கும் வெயிலில், சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களில், இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் காத்திருக்கும் பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் சிக்னல் சந்திப்புகளில், பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வெயிலில் வாகன ஓட்டிகளுக்கு சிறிதளவு நிம்மதி கிடைத்திருப்பதுடன் வரவேற்பும் பெற்றுள்ளது.
இதேபோல, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சிக்னல்களில், பசுமை நிழற்பந்தல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னையில் நிழற்பந்தல் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து வருகிறோம்.
அத்துடன், புதுச்சேரி யில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தலின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன. சென்னையில் பிரதான சிக்னல்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சிக்னல்களில், முதற்கட்டமாக நிழற்பந்தல் அமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும்.
அதேபோல, மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி நடக்கும் இடங்களில், பஸ் நிழற்குடைகள் அகற்றப்பட்டுள்ளன. பயணியரின் வசதிக்காக, மற்ற இடங்களில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர, மெட்ரோ நிறுவனத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நிழற்பந்தல் அமைப்பதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சென்னை மாநகராட்சி ஆராய்ந்து வருகிறது.
'சென்னையில் அமைக்கப்பட்ட பின், படிப்படியாக மற்ற நகரப் பகுதிகளில் அமைக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படும்' என்றனர்.