'உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் நாட்டிலேயே தமிழகம் தான் நம்பர் 1'
'உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் நாட்டிலேயே தமிழகம் தான் நம்பர் 1'
ADDED : ஆக 03, 2024 12:28 AM
சென்னை:''திராவிட மாடல் அரசு அமைந்த பின், அனைத்து துறைகளுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதிலும், கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், இந்தியாவிலேயே தமிழகம் நம்பர் ஒன்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசு பள்ளியில் படித்து, உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கான பாராட்டு விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாம் ஆட்சிக்கு வந்த பின், அரசு பள்ளி மாணவர்கள், இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு, சாரை சாரையாக படிக்க போகின்றனர்.
கடந்த 2022ல் 75 மாணவர்கள்; 2023ல் 274 மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கச் சென்றனர். இந்த ஆண்டு, 447 மாணவர்கள் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
திராவிட மாடல் அரசு அமைந்த பின், அனைத்து துறைகளுமே வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அதிலும் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், தமிழகம் தான் இந்தியாவிலேயே 'நம்பர் 1'.
நான் துவக்கிய புதுமை பெண் திட்டத்தின் பயனாக, கல்லுாரியில் சேரும் மாணவியர் எண்ணிக்கை, 34 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏராளமானவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்துள்ளது. ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மட்டுமல்ல.
தேசிய சட்டப்பல்கலை, விண்வெளி ஆராய்ச்சி என, அனைத்து துறைகளிலும், முதன்மையாக உள்ள உயர் கல்வி நிறுவனங்களில், நம்முடைய மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழக மாணவர்கள் 14 பேர், தைவான், மலேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள, உலகின் சிறந்த பல்கலைகளில் சேர, முழுமையான, 'ஸ்காலர்ஷிப்' பெற்றுள்ளனர்.
இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களுடைய கல்விச் செலவையும், வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின், முதல் பயணச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
அரசு பள்ளி மாணவர்கள், மிகப்பெரிய கல்வி நிறுவனங்களுக்கு போவது, பெரும் சமூக, பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளம். இதன் வழியாக அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.