ADDED : மார் 09, 2025 02:22 AM
''தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க, தமிழக அரசு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மகளிர் முன்னேற்றம் என்றால், அவர்கள் அறிவுத்திறன் உயர வேண்டும். பள்ளி, கல்லுாரியில் படிக்கும்போது, அறிவுத்திறன் உயரும். புதிய கல்விக் கொள்கை, மாணவ - மாணவியரின் அறிவுத்திறனை உயர்த்துவதற்கான புதிய சூழலை ஏற்படுத்தி உள்ளது. முதல் மொழி தாய்மொழி, அடுத்து ஆங்கிலம், மூன்றாவது அறிவுத்திறனை உயர்த்த, எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம்.
அறிவை வளர்த்துக் கொள்ளக்கூடிய வேளையில், மாணவர்களுக்கு தமிழக அரசு முட்டுக்கட்டையாக இருக்க வேண்டாம். மாணவர்கள் மென்மேலும் படித்து முன்னேற, மூன்று மொழி அல்ல; பல மொழி கற்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.
பா.ஜ., கையெழுத்து இயக்கம் நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதே கையெழுத்து இயக்கத்தை, 'நீட்' தேர்வுக்கு மாணவர்கள் செல்லக்கூடாது என தி.மு.க., நடத்தியது. அப்போது எதுவும் செய்யாமல், தற்போது பா.ஜ.,வினரை கைது செய்கின்றனர். தி.மு.க.,வுக்கு ஒரு சட்டம், பா.ஜ.,வுக்கு ஒரு சட்டமா?
புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு ஒரு வாய்ப்பு கொடுக்கும்போது, அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம். தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, சாராயம் பெருகி வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல், அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தீராத பிரச்னைகளை தீர்க்க முடியாததால், மக்களை குழப்ப, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.