தமிழக காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை: பழனிசாமி காட்டம்
தமிழக காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை: பழனிசாமி காட்டம்
ADDED : ஜூலை 09, 2024 06:40 AM

ஓமலுார் : ''தமிழகத்தில், காவல்துறைக்கு சுதந்திரம் கிடையாது என்பதால், ரவுடிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்ட, அ.ம.மு.க., மற்றும் ஓ.பி.எஸ்., அணியிலிருந்து விலகிய, 500க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில், நேற்று சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள, அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
பாதுகாப்பு இல்லை
பின் பழனிசாமி அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,விலிருந்து பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு விட்டார். இனி அவரை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டதால், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்திடாது. தன் துறையில் முதல்வர் திறமையாக செயல்பட்டிருந்தால், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.
பொம்மை முதல்வராக இருப்பதால், காவல் துறையினருக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது. அதனால் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
இதனால் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, போதை பொருட்கள் விற்பனை, பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது.
தமிழகமே ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டால்தான், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும், ரவுடிகளை அடக்க முடியும்.
தமிழகத்தில் மக்கள், பெண்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கேட்டுள்ளார்.
ராஜினாமா ஏன்?
தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத்திறன் இல்லை. எந்த துறையிலும் வளர்ச்சி இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில், சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பல்வேறு பாலங்கள் கட்டித் தரப்பட்டன.
அணைமேடு பகுதியில் பாலம் பணி முடிவடைந்த நிலையில், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் திறக்கப்படாமல் உள்ளது.
'பாகம்' பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு, கவுன்சிலர்களுடன் ஒற்றுமை இல்லாத நிலை ஆகியவற்றால், நெல்லை மற்றும் கோவை மேயர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழக முழுதும் நிர்வாகத் திறமை இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. அதிலும் உள்ளாட்சி நிர்வாகம் படுபாதாளத்தில் உள்ளது. மக்களுக்கு அடிப்படை வசதிகளே கிடைப்பதில்லை. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பதியப்பட்டிருக்கும் வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்த கேள்விக்கு, ''அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை,'' என்றார்.
'ஜெயலலிதா ஆட்சி காலத்தில், கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைந்தனரே' என்ற கேள்விக்கு, ''அவர்கள் யாரும் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை, கட்சியினரை அடிக்கவில்லை; கட்சி வாகனங்களை நொறுக்கவில்லை,'' என்றார் பழனிசாமி.

