கட்டட வடிவமைப்பாளர் எண்ணிக்கை 2வது இடத்தை பிடித்தது தமிழகம்
கட்டட வடிவமைப்பாளர் எண்ணிக்கை 2வது இடத்தை பிடித்தது தமிழகம்
ADDED : மார் 28, 2024 12:11 AM
சென்னை:நாடு முழுதும் கட்டட வடிவமைப்பாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், 13,136 பேருடன் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி தொடர்பான தொழில்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகமாக உள்ளன.
இவற்றில், கட்டுமான துறையில் பல்வேறு நிலைகளில், தொழில்முறை வல்லுனர்களை பயன்படுத்துவதும் அதிகரித்து உள்ளது.
தரமான கட்டுமானங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில், அரசு துறைகளின் கட்டுப்பாடு, விதிமுறைகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் வீட்டுவசதி திட்டங்கள், தனியார் திட்டங்களால், கட்டடவடிவமைப்பாளர் உள்ளிட்ட வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது.
கட்டுமான துறையில், பார்லிமென்ட் சட்டப்படி உருவாக்கப்பட்ட கவுன்சில், கட்டட வடிவமைப்பாளர்களுக்கு மட்டுமே உள்ளது. இதில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, கட்டட வடிவமைப்பாளர்களாக செயல்பட முடியும்.
மாநில வாரியாக கட்டட வடிவமைப்பாளர்கள் எண்ணிக்கை குறித்து, இக்கவுன்சில் சமீபத்தில் புள்ளிவிபரங்களை வெளியிட்டது.
இதன்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 33,952 கட்டட வடிவமைப்பாளர்கள் உள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக, 13,136 கட்டட வடிவமைப்பாளர்களுடன் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:
கட்டுமான துறை சார்ந்த வல்லுனர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு விகிதம் கணக்கிடப்படுகிறது. ஒரு கோடி மக்களுக்கு, 5,450 கட்டட வடிவமைப்பாளர்கள் என்ற நிலையில், தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இது தமிழகத்தில் பதிவு செய்து, இங்கேயே தொழில் செய்பவர்கள் குறித்த விபரமாக உள்ளது. தமிழகத்தில் பிறந்து, இங்கு படித்து, வேறு மாநிலங்களில் தொழில் செய்வோரின் எண்ணிக்கையை சேர்த்தால், இது மேலும் அதிகரிக்கும்.
எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு சிறிய கட்டடங்களிலும் இத்தகைய வல்லுனர்களை பயன்படுத்த, மக்களிடம் விழிப்புணர்வுஅதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

