குஜராத்தில் கொத்தடிமையாக தமிழக தொழிலாளர்கள்: மீட்க ஐகோர்ட் உத்தரவு; மீட்கப்பட்டவர் தகவலால் அதிரடி
குஜராத்தில் கொத்தடிமையாக தமிழக தொழிலாளர்கள்: மீட்க ஐகோர்ட் உத்தரவு; மீட்கப்பட்டவர் தகவலால் அதிரடி
ADDED : ஆக 28, 2024 12:00 AM

மதுரை : குஜராத்தில் ஸ்வீட் கடையில் கொத்தடிமைகளாக வேலை செய்யும், தமிழகம் மற்றும் பிற மாநில தொழிலாளர்களை மீட்க, துாத்துக்குடி கலெக்டருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வசந்தா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், 'என் இரண்டாவது மகன் அய்யனார், 27, குஜராத்தில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை செய்கிறார். உசிலம்பட்டியை சேர்ந்த கடை உரிமையாளர், என் மகனை கொத்தடிமையாக நடத்துகிறார். அடித்து துன்புறுத்துகிறார்; அவரை மீட்க வேண்டும்' என்றார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு அந்த மனுவை விசாரித்தது. அய்யனார் ஆஜர்படுத்தப்பட்டார். அவர், 'குஜராத்தில் நான் வேலை செய்த கடையில் பழனி, சாத்துார், திருநெல்வேலி, நாமக்கல் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சிலர் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'அந்த தொழிலாளர்களை மீட்க துாத்துக்குடி கலெக்டர், எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். பின், அய்யனார் அவரது தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.