ADDED : ஏப் 10, 2024 03:02 AM

சென்னை : சுட்டெரிக்கும் வெயிலால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக, 20,000 மெகா வாட்டை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.
ஒரு நாளைக்கு, 24 மணி நேரமும் பயன்படுத்திய மின்சாரம் மின் நுகர்வு எனப்படுகிறது. மின் தேவை என்பது ஒரு நாளில் காலை, மாலை என, ஒவ்வொரு நேரத்திற்கும் மாறுபடும்.
கோடை வெயிலால், வீடு, அலுவலகங்களில், 'ஏசி' பயன்பாடு அதிகரித்துள்ளது. பகலில் கிடைக்கும் சூரியசக்தி மின்சாரம், விவசாயத்திற்கு தான் வழங்கப்படுகிறது.
மேலும், ஐ.பி.எல்., கிரிக்கெட், இறுதி தேர்வுக்கு அதிக நேரம் படிப்பது உள்ளிட்ட காரணங்களால், மின் நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால், மின் நுகர்வு இம்மாதம், 5ம் தேதி மாலை, 4:00 மணிக்கு இதுவரை இல்லாத அளவாக, 19,580 மெகா வாட்டாக அதிகரித்தது. வார விடுமுறையால், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனால், அடுத்த இரு தினங்களிலும் மின் தேவை, 17,000 மெகா வாட்டாக குறைந்தது.
நேற்று முன்தினம் 8ம் தேதி வழக்கத்தை விட வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து, அன்று மதியம், 3:30 மணிக்கு மின் நுகர்வு எப்போதும் இல்லாத வகையில், 20,000 மெகா வாட்டை தாண்டி, 20,125 மெகா வாட்டாக அதிகரித்தது.
அதை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் உற்பத்தி, மின் கொள்முதல் செய்யப்பட்டதால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை.

