தமிழி எழுத்து பானை ஓடுகள் சென்னானுாரில் கண்டெடுப்பு
தமிழி எழுத்து பானை ஓடுகள் சென்னானுாரில் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 22, 2024 03:38 AM

சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானுார் அகழாய்வில், பழமையான தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
தமிழக தொல்லியல் துறை சார்பில், எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் நடக்கின்றன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுாரில் நடக்கும் அகழாய்வில், புதிய கற்காலம், வரலாற்று துவக்க காலம் உள்ளிட்டவற்றை சார்ந்த, தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன.
கற்கருவி
ஏற்கனவே இங்கு 8,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவி, உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, இடைக்கால வரலாற்று காலத்தைச் சேர்ந்த, 32 செ.மீ., நீளம், 3 செ.மீ., தடிமனுடன், 1.3 கிலோ எடையுள்ள இரும்பு ஏர் கலப்பையின் கொழுமுனை கண்டெடுக்கப்பட்டது.
அவற்றுடன், சுடுமண் முத்திரை, சங்கு வளையல் மற்றும் கண்ணாடி வளையல்களின் துண்டுகள், வட்டச்சில்லுகள், தக்களி உள்ளிட்ட வரலாற்று துவக்க காலமான சங்க காலத்தை சேர்ந்த தொல்பொருட்களும் கிடைத்தன.
தற்போது, நிலத்தில் 90 செ.மீ., முதல் 108 செ.மீ., வரையிலான ஆழத்தில், 'தமிழி' என்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில், (ந்) தை பாகஅந், (சா)த்தன், ஊகூர் என பொறிக்கப்பட்டுள்ளது.
ஊர் பெயர்
பொதுவாக, ஊரின் பெயர்கள் கல்வெட்டு களில் வெட்டப்படுவதே வழக்கம். வேள்ஊர், மதிரை, இவகுன்றம், வெல்வெளிஇய், இலஞ்சி, கருஊர், முசிறி, வெள்அறை, தேனுார், அகழ்ஊர், கோகூர் உள்ளிட்ட ஊரின் பெயர்கள் கல்வெட்டுகளில் தான் காணப்படுகின்றன.
பானைகளில் அவற்றின் உரிமையாளரின் பெயர் தான் பொறிக்கப்படுவது வழக்கம். இந்த வழக்கத்துக்கு மாறாக, உறையூரில் கிடைத்த பானை ஓட்டில், 'மூலனபேடு' என்ற ஊரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இங்கு கிடைத்துள்ள பானை ஓடு ஒன்றில், 'ஊகூர்' என்ற ஊரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கண்டெடுப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த பானை ஓடுகளின் படங்களையும், கிடைத்த தகவலையும், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தன் சமூக வலைதளத்தில் நேற்று பகிர்ந்துள்ளார்.

