தெலுங்கானா தேர்தல் களத்தில் தமிழிசை ஓடும் ரயிலில் பிரசாரத்தை துவக்கினார்
தெலுங்கானா தேர்தல் களத்தில் தமிழிசை ஓடும் ரயிலில் பிரசாரத்தை துவக்கினார்
ADDED : ஏப் 30, 2024 05:41 AM

பிரதமர் மோடியின் உத்தரவை அடுத்து, தெலுங்கானாவுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய சென்றுள்ளார், அம்மாநிலத்தின் முன்னாள் கவர்னர் தமிழிசை.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழியை எதிர்த்து, துாத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமிழிசையை, தெலுங்கானா கவர்னராக நியமித்து, கவுரவம் அளித்தார் பிரதமர் மோடி.
அரசியல் ஆர்வம்
புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி விடுவிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பொறுப்பும் கூடுதலாக தமிழிசைக்கு அளிக்கப்பட்டது.
இரு மாநில கவர்னராக செயல்பட்ட தமிழிசை, கவர்னர் பொறுப்பை காட்டிலும் அரசியல்வாதியாக இருப்பதையே விரும்பினார். இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும், பிரதமர் மோடியிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
'இப்போதைக்கு கவர்னர் பணியை பாருங்கள்; தேர்தல் நெருக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என, இருவரும் உறுதியளித்தனர். இதையடுத்து, கவர்னராக இருந்தபோதும், தொடர்ந்து பொது மேடைகள் வாயிலாக அரசியல் பேசி, தன் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தார் தமிழிசை.
அவர் விருப்பப்பட்டது போலவே, 2024க்கான லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், தமிழிசைக்கு பா.ஜ., மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. அதைத் தொடர்ந்து, இரு மாநில கவர்னர் பதவியையும் ராஜினாமா செய்து, மீண்டும் பா.ஜ.,வில் உறுப்பினரானார்.
அடுத்த சில நாட்களில், பா.ஜ., சார்பில், தென் சென்னை வேட்பாளராக தமிழிசை அறிவிக்கப்பட்டு, தேர்தலையும் சந்தித்து விட்டார். முடிவுக்காக காத்திருக்கும் அவருக்கு, அடுத்த பணியை பிரதமர் மோடி அளித்துஉள்ளார். தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
இதையடுத்து, தெலுங்கானா சென்றிருக்கும் தமிழிசை, அங்கு தான் கொஞ்சமாக அறிந்திருக்கும் தெலுங்கில், அங்கிருக்கும் மக்களிடம் பேசி, பா.ஜ.,வுக்காக ஓட்டு கேட்டு வருகிறார்.
வரலாற்று சாதனை
தமிழிசை கூறியதாவது:
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு பிரசாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டது போல, கட்சித் தலைமை மற்ற தலைவர்களையும் பல மாநில தேர்தல் பிரசாரத்துக்கும் அனுப்பி வைக்கிறது.
அப்படித்தான், மத்திய அமைச்சர்களும், மேலிட நிர்வாகிகளும், பிற மாநில தலைவர்களும் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தனர். அது, தமிழக பா.ஜ.,வுக்கு வலுசேர்த்தது.
அதைப்போல, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பிரசாரத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை தான். இருந்தாலும், தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய எனக்கு, அங்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருப்பதால், பிரசாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன்.
சென்னையில் இருந்து சார்மினார் எக்ஸ்பிரசில் பயணம் செய்து, தெலுங்கானா வந்திருக்கிறேன். ரயிலிலேயே அம்மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களிடம் பிரசாரம் மேற்கொண்டேன். இப்படி பா.ஜ., வெற்றிக்காக பல முனைகளில், பல்வேறு தலைவர்களும் பாடுபடுகின்றனர்.
அதனால், பா.ஜ., இம்முறை 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதோடு, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்று வரலாற்று சாதனை படைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

