புதுச்சேரியில் 6 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் சேலம் கொண்டு சென்ற தமிழக வனத்துறை
புதுச்சேரியில் 6 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் சேலம் கொண்டு சென்ற தமிழக வனத்துறை
ADDED : ஜூன் 15, 2024 04:56 AM

வில்லியனுார்: புதுச்சேரியில் வேளாண் அமைச்சர் மகளின் இடத்தில் இயங்கிய சந்தன ஆயில் கம்பெனியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5.5 டன் சந்தன கட்டைகளை தமிழக வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் கிராமத்தில் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகள் பிரேமாவிற்கு சொந்தமான இடத்தில், 'இந்தோ அப்ரோ எஸசன்ஷியல் ஆயில் (பி) லிமிடெட்' என்ற சந்தன ஆயில் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வரகிறது. இதனை கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி கேரளாவில் இருந்து சேலம் வழியாக சென்ற கன்டெய்னர் லாரியை சேலம் வனத்துறையினர் சோதனை செய்தபோது, 86 மூட்டைகளில் ரூ. ஒரு கோடி மதிப்புள்ள 1.5 டன் சந்தன கட்டைகள் இருந்து கண்டுபிடித்தனர். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த முகமது சுகைல், முகமது பசிலு ரகுமான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களில் முகமது மிசைல், முகமது அப்சர், பஜாஸ், முகமது பசிலு ரகுமான் ஆகிய 4 பேரை காவலில் எடுத்து விசாரித்தபோது, கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சந்தன கட்டைகள் கடத்தி சென்றதாகவும், இதேபோன்று பலமுறை சந்தன கட்டைகள் கடத்தி சென்று புதுச்சேரியில் கொடுத்துள்ளதாக வாக்குமூலம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அடங்கி 25 பேர் கொண்ட குழுவினர் புதுச்சேரி உளவாய்க்காலில் இயங்கி வரும் சந்தன ஆயில் கம்பெனியை, வில்லியனுார் தாசில்தார் சேகர், போலீசார் முன்னிலையில் 2 நாள் சோதனை செய்தனர். அதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 டன் சந்தன மர கட்டைகள், தலா 10 கிலோ எடை கொண்ட 60 சாக்கு பைகளில் அரைக்கப்பட்ட சந்தன மர துாள் ஆவணங்கள் இன்றி மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
முதல் நாள் ஆய்வில் சந்தன மரக்கட்டைகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக மொபைல்போனில் சுரேஷ் கூறினார். ர். ஆவணங்களை சமர்பிக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று சுரேஷ் மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. அங்கிருந்த ஊழியர்களும் தங்களுக்கு ஏதும் தெரியாது என தெரிவித்தனர்.
அதனையொட்டி தமிழ வனத்துறையினர், மாவட்ட நிர்வாம் மற்றும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துவிட்டு சந்தன ஆயில் கிடங்கில் இருந்த 6 டன் சந்தன மரக்கட்டைகள் மற்றும் மரத்துாள் மூட்டைகளை பறிமுதல் செய்து சேலம் கொண்டு சென்றனர்.

