குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் அக். , 1ல் வருகை
குஜராத் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் அக். , 1ல் வருகை
ADDED : செப் 29, 2024 01:33 AM
சென்னை:குஜராத் மாநிலத்தில், மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய, தமிழகத்தைச் சேர்ந்த 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை மறுதினம் ரயிலில் சென்னை வர உள்ளனர்.
அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தைச் சேர்ந்த 26 பேர், குஜராத்தின் பாவ்நகருக்கு புனித யாத்திரை சென்றனர். யாத்திரை முடிந்து திரும்பும்போது, 26ம் தேதி மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், அவர்களின் பஸ் சிக்கியது. அவர்களை மீட்டு தமிழகம் அழைத்துவர, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள், குஜராத் மாநில நிர்வாகத்துடன் பேசி, தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
குஜராத் மாநில நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், 26 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்து, பாவ் நகரில் தங்க வைத்தனர்.
அவர்கள் அக்., 1 காலை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வர உள்ளனர். அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல, வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.