தோல் தொழிற்சாலைகள் வழக்கு - ஆவணங்களை பாதுகாக்க உத்தரவு
தோல் தொழிற்சாலைகள் வழக்கு - ஆவணங்களை பாதுகாக்க உத்தரவு
ADDED : ஏப் 12, 2024 09:37 PM
சென்னை:வேலுார் தோல் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், ஆவணங்களை பாதுகாக்குமாறு அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'வேலுார் பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் காற்று, நீர் மாசு ஏற்படுகிறது.
'இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வேலுார் குடிமக்கள் நல மன்றம், 2016ல் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
வேலுார் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது பற்றிய பிரச்னை, 1991 முதல் நீதிமன்றங்களில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக வேலுார் குடிமக்கள் நல மன்றம் தொடர்ந்த வழக்கில், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை கணக்கிட்டு இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துஉள்ளன.
இது போன்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க, சென்னையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கூடுதல் அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் தீர்வு வந்த பின், மனுதாரர் தீர்ப்பாயத்தை அணுகலாம். அதுவரை வழக்கு தொடர்பான ஆவணங்களை பதிவுத்துறை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

