சூரியசக்தி மின் கணக்கெடுப்பு; மீட்டருக்கு கட்டணம் நிர்ணயம்
சூரியசக்தி மின் கணக்கெடுப்பு; மீட்டருக்கு கட்டணம் நிர்ணயம்
ADDED : மே 21, 2024 04:58 AM

சென்னை: வீடு, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, கட்டட உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம். இரவு மற்றும் மழை காலங்களில், சூரியசக்தி மின்சாரம் கிடைக்காது.
சூரியசக்தி மின் நிலையம் அமைத்தாலும், மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிஉள்ளது.
இதனால், சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியானது, மின் வாரியத்திற்கு வழங்கியது எவ்வளவு, மின் வாரிய மின்சாரத்தை பயன்படுத்தியது எவ்வளவு உள்ளிட்ட விபரங்களை துல்லியமாக கணக்கிட, 'பை டைரக் ஷனல்' மீட்டரை மின் வாரியம் பொருத்துகிறது.
இந்த மீட்டரின் விலை அதிகமாக உள்ளதால், அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மத்திய அரசின் திட்டத்தில் பலரும் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து வருகின்றனர். எனவே, தமிழகம் முழுதும் ஒரு முனை, மும்முனை இணைப்புகளுக்கான பை டைரக் ஷனல் மீட்டருக்கு, ஒரே மாதிரியாக கட்டணம் நிர்ணயித்து மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஒருமுனை இணைப்பிற்கான பை டைரக் ஷனல் மீட்டர் கட்டணம், மின் இணைப்பு, ஜி.எஸ்.டி., போன்றவற்றை உள்ளடக்கிய, 2,764 ரூபாயாகவும்; மும்முனை இணைப்பிற்கு, 5,011 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் தொழில் நிறுவனங்களுக்கான மீட்டர் கட்டணம், 10,720 ரூபாயாக உள்ளது.

