ADDED : ஜூன் 23, 2024 04:31 PM

பல்லடம்:
'டாஸ்மாக் வருவாய் உயர்வு என்பது, தமிழக அரசுக்கு கேவலமானது' என, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து சாடியுள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளக்குறிச்சியில், 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்தது, காவல்துறையின் மெத்தனப்போக்கு, தமிழக அரசின் செயல்பாட்டின்மையை காட்டுகிறது. ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பே இல்லை. மாமூல் வாங்கிக்கொண்டு கண்டும் காணாமல் இருந்ததே இந்த அவல நிலைக்கு காரணம்.
சாராயம் குடித்து இறந்தவர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவது பைத்தியக்காரத்தனம். எதிர்காலத்தில் இதுவே முன் உதாரணமாகிவிடும்.
ஏற்கனவே, குடிப்பழக்கத்தால் தமிழகம் சீரழிந்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் தலைவிரித்து ஆடி வருகின்றன. 'டாஸ்மாக்' மூலம் வருவாய் உயர்வு என்பது அரசுக்கு கேவலமான ஒன்று.
கடந்த காலங்களில் குறிப்பிட்ட கிராமங்களில் இருந்த தென்னை விவசாயம் இன்று பரவலாக நடந்து வருகிறது. கள் இறக்குவதை முறைப்படுத்தி, விற்பனையை ஒழுங்குபடுத்தினால் இதுபோன்ற அவலங்கள் நடக்காது. இதற்கு, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலில் மாற வேண்டும். கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்டவற்றை ஒழிக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.