ADDED : ஜூலை 11, 2024 01:48 AM
சென்னை:ஒருவருக்கு எத்தனை மது பாட்டில் விற்க வேண்டும் என்பதற்கு விதியை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், வரும் 16ம் தேதி சென்னை எழும்பூரில் பேரணி நடத்தி, முதல்வரிடம் மனு அளிக்கப் போவதாக அறிவித்தது.
இதையடுத்து, சங்க நிர்வாகிகளை அழைத்து சென்னையில் நேற்று, டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், பேச்சு தோல்வி அடைந்துள்ளது.
இதுகுறித்து, சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது:
போராட்டத்தை வாபஸ் பெறுமாறு நிர்வாகம் வலியுறுத்தியது. அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் கேட்கப்பட்ட நிலையில், ரேஷன் ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் தருவதாகவும், விரைவில் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவு எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருவருக்கு நான்கு மது பாட்டில் விற்குமாறு தெரிவித்தனர். இது தொடர்பாக, உத்தரவாதம் அளிக்குமாறு வலியுறுத்தினோம்;  அதை நிர்வாகம் ஏற்கவில்லை. போராட்டம் நடத்துவது எங்கள்நோக்கம் அல்ல.
எனவே, எங்கள் கோரிக்கை குறித்து, அரசு மீண்டும் பேச்சு நடத்த வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

