ADDED : மே 13, 2024 04:53 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில், டீசல் திருடுவதற்காக, சிமென்ட் லோடுடன் கடத்தப்பட்ட டாரஸ் லாரியை போலீசார் மீட்டனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சிமான் மகன் ராஜதுரை, 32; டிரைவர். இவர், கடந்த 8ம் தேதி இரவு அரியலுார் மாவட்டம், தளவாய் பகுதியில் 300 சிமென்ட் மூட்டைகளை டாரஸ் லாரியில் ஏற்றிக் கொண்டு 9ம் தேதி காலை 5:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த வடகுறும்பூரில் லோடு இறக்க சென்றார்.
அங்கு கடை உரிமையாளர் வெளியூரில் இருப்பதாகவும், 2 நாட்கள் ஆகும் என கூறியுள்ளனர்.
இதனால் லாரியை, காட்டுநெமிலி அருகே ராஜதுரை நிறுத்திவிட்டு வந்தார். நேற்று காலை 7:00 மணிக்கு சென்றபோது லாரியைக் காணவில்லை. இதுகுறித்து, உளுந்துார்பேட்டை போலீசில் நேற்று பகல் 1:00 மணியளவில் ராஜதுரை புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் லாரியை தேடினர். அப்போது, மாலை 4:00 மணியளவில் ஏ.குமாரமங்கலம் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிமென்ட் லோடுடன் டாரஸ் லாரி நின்றிருப்பதை கண்டுபிடித்தனர்.
லாரியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது லாரி ஸ்டார்ட் ஆகவில்லை. பிறகு பார்த்தபோது, லாரியில் இருந்த டீசல் முழுதும் திருடு போயிருப்பது தெரியவந்தது.
பின்னர் டீசல் நிரப்பி லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். உளுந்துார்பேட்டையில் டீசல் திருட டாரஸ் லாரி கடத்தி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.