கவர்னர் நடுநிலையாக நடக்காததால் தேநீர் விருந்து புறக்கணிப்பு: தி.மு.க.,
கவர்னர் நடுநிலையாக நடக்காததால் தேநீர் விருந்து புறக்கணிப்பு: தி.மு.க.,
ADDED : ஆக 14, 2024 08:48 PM
சென்னை:'அரசியல் கட்சி அடிப்படையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்' என, தி.மு.க., அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை ஒட்டி, கவர்னர் ரவி இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். அதில் பங்கேற்கப் போவதில்லை என, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., மற்றும் வி.சி., உள்ளிட்ட, தி.மு.க., கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
ஆளும் தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பாக, தி.மு.க., அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ''அரசியல் கட்சி அடிப்படையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க., புறக்கணிக்கும். தமிழக அரசு சார்பில் பங்கேற்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார்,'' என்றார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, ''கவர்னர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும்போது, எதிர்க்கட்சிகளும் இப்படி தான் தேநீர் விருந்தை புறக்கணிக்கும். என்றைக்கு அவர் நடுநிலையோடு நடக்கிறாரோ, அன்றைக்கு தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்து யோசிக்கலாம்,'' என்றார்.