மருத்துவ காப்பீடு குளறுபடி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீடு குளறுபடி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 17, 2024 12:44 AM

சென்னை: புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், சென்னை எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:
தமிழக அரசு அறிவுறுத்தியபடி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், 2021 முதல் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அதன்படி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, முழு மருத்துவத்துக்கான காப்பீட்டு தொகையையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்க வேண்டும்.
ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள், சிகிச்சை கட்டணத்தில், 20 முதல் 40 சதவீதம் வரையே வழங்குகின்றன. மீதி தொகையை ஆசிரியர்களோ, அரசு ஊழியர்களோ தான் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்த வகை முறைகேட்டில் ஈடுபடும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, முழு காப்பீட்டு தொகையும் பயனாளிக்கு கிடைக்க அரசு உதவ வேண்டும்.
அதேபோல, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து நேரடியாக, மாதந்தோறும் வருமான வரி பிடிக்கும் முறையை கைவிட்டு, ஆசிரியர்களின் விருப்பப்படி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.