ADDED : மே 24, 2024 04:07 AM

சென்னை : ''ராமர் கோவிலை இடிக்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை; அயோத்தியில் சீதை மற்றும் அனுமனுக்கு கோவில் கட்டுவோம்,'' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.
அவரது பேட்டி: 'நான் சாதாரணமாக எல்லா மனிதர்களை போல பிறக்கவில்லை. இயற்கை முறைப்படி நான் பிறக்கவில்லை; நேரடியாக கடவுள் வாயிலாக பிறந்தேன்' என, பிரதமர் மோடி சொல்கிறார். பா.ஜ., ஆட்சிக்கு வராது என்பதால், பிரதமர் மோடி ஏதேதோ பேசி வருகிறார்.
தரமற்ற நிலக்கரியை தமிழகத்திற்கு அதானி கொடுத்து, 6,000 கோடி ரூபாய் ஊழலை செய்துள்ளார். தமிழர்களை திருடர்கள் என, பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். ஒடிசா மாநிலத்தை தமிழர்கள் ஆளக்கூடாது என்றால், பாகிஸ்தானில் பிறந்த அத்வானியை ஏன் இந்தியாவில் துணை பிரதமராக்கினர்?
தமிழர்களை சீண்டிப் பார்க்க வேண்டாம். நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். தமிழர்களை பொறுத்தவரையில், நாட்டின் ஒருமைப்பாடு மீது மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள்.
'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவிலை காங்கிரஸ் இடிக்கும்' என, பிரதமர் பொய் பிரசாரம் செய்கிறார். கோவிலை இடிக்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அயோத்தியில் சீதைக்கும் கோவில் கட்டுவோம்; தேவைப்பட்டால் அனுமனுக்கும் கோவில் கட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.