UPDATED : மே 26, 2024 03:54 AM
ADDED : மே 25, 2024 11:57 PM

பாங்காக், தாய்லாந்தில் சுற்றுலா பயணியரிடமிருந்து உணவு மற்றும் பொருட்களை காட்டு குரங்குகள் பறித்துச் செல்வது அதிகரித்துள்ளதால், அவற்றை கூண்டு வைத்து பிடித்து வெளியேற்றும் பணிகள் துவங்கியுள்ளன.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, சுற்றுலா பயணியர் வாயிலாக கிடைக்கும் வருவாயை பெருமளவு நம்பியுள்ளது.
தலைநகர் பாங்காக் அருகே உள்ள லோப்புரி மாகாணத்தின், லோப்புரி நகருக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.
![]() |
இந்த நகரத்தை 2,000த்துக்கும் மேற்பட்ட குரங்குகள் ஆக்கிரமித்துள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததால், உணவு தேடி நகருக்குள் வரும் அவை கடைகளுக்குள் புகுந்து உணவை சூறையாடுகின்றன.
நகர பகுதிகளில் வசிக்கும் சிலர், குரங்குகளுக்கு உணவளிப்பதால், அதற்காக ஏராளமான குரங்குகள் படையெடுத்து வருகின்றன.
இதனால், குரங்குகளுக்கு உணவளிப்போருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனாலும், குரங்குகளின் தொல்லை குறையவில்லை.
சுற்றுலா பயணியர் கையில் வைத்திருக்கும் பைகளையும் பறித்துச் செல்கின்றன. இதற்கு அச்சப்பட்டே இங்கு வரும் சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் வெகுவாக குறைந்தது.
![]() |
இதனால் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, துாரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விட நகர நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.
இதற்கென பிரத்யேக கூண்டுகள் தயாரிக்கப்பட்டு, அதில் குரங்குகளுக்கு பிடித்த பழ வகைகளை வைத்து, அவற்றை பிடிக்கின்றனர். இதுவரை 30 குரங்குகள் மட்டுமே பிடிபட்டுள்ளன.
இவ்வாறு பிடிபடும் குரங்குகளுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவை மயங்கிய பின் பத்திரமாக வனப் பகுதியில் விடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிடிபடும் குரங்களுக்கு கருத்தடையும் செய்யப்படுகிறது.
கூண்டுக்குள் சென்று குரங்குகள் சிக்கிக்கொள்வதை பார்க்கும் பிற குரங்குகள் அதனுள்ளே செல்லாமல் தவிர்க்கின்றன. இதனால் மற்ற குரங்குகளை எப்படி பிடிப்பது என, அந்த ஊர் அதிகாரிகள் விழி பிதுங்கி போய் உள்ளனர்.