கோடிகளை விழுங்கியும் நாறுது தஞ்சை குப்பை கிடங்கு: ஆண்டுக்கொரு திட்டம் போட்டு ஆட்சியாளர்கள் அடிக்கும் கூத்து
கோடிகளை விழுங்கியும் நாறுது தஞ்சை குப்பை கிடங்கு: ஆண்டுக்கொரு திட்டம் போட்டு ஆட்சியாளர்கள் அடிக்கும் கூத்து
ADDED : ஜூலை 15, 2024 01:23 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் தினமும், 110 டன் குப்பை சேகரமாகின்றன.
இந்த குப்பை, 25 ஆண்டுகளாக, ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. முன்பு குப்பை மக்கியதும் உரமாக விற்பனை செய்யப்பட்டன. இதனால், கிடங்கில் அதிகளவில் குப்பை தேங்காமல் இருந்தன.
மூச்சுத்திணறல்
காலப்போக்கில் உரம் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால், குப்பை மலைபோல் தேக்கமடைந்தன. இதில், அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையானது.
தீ புகையால் செக்கடி தெரு, ஜெபமாலைபுரம், புதுத்தெரு, மேல வீதி, வடக்கு வீதி, ரெட்டிபாளையம், சிங்கபெருமாள் குளம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
அப்பகுதிகளில் கடும் துர்நாற்றமும் வீசும்.இதற்காக, 2014ல், 90 லட்சம் ரூபாய் செலவில், திடக்கழிவில் இருந்து மின் உற்பத்தி செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
பின், 2016ல், 7.38 கோடி ரூபாய் மதிப்பில் தலா 100 மீட்டர் நீளம், அகலத்தில், 4.5 மீட்டர் ஆழத்துக்கு குழி தோண்டி குப்பையை கொட்டி மூடுவது என, முடிவு செய்யப்பட்டது. ஆனால், குழி தோண்டப்பட்டதே தவிர, குப்பையை கொட்டி மூட நடவடிக்கை எடுக்கப்படாமல், அத்திட்டமும் கைவிடப்பட்டது.
இதற்கிடையே, 2020ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகரில் 12 இடங்களில் நுண் உரமாக்கல் மையம் அமைத்து, அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட்டது. அத்திட்டமும் வெற்றி பெறவில்லை.
கடந்த, 2019ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 14.90 கோடி ரூபாய் செலவில் பயோமைனிங் என்ற குப்பை தரம் பிரித்து, அப்புறப்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டு, 2022ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது.
1,000 குடியிருப்புகள்
நான்கு இயந்திர யூனிட்டுகளில், தினசரி 1,200 முதல் 1,500 கன மீட்டர் அளவிலான குப்பை தரம் பிரிக்கப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட சில கழிவுகள் சிமென்ட் நிறுவனத்திற்கும், பிற கழிவுகள் உரமாக பயன்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
மேலும், தற்போதைய மேயர் ராமநாதன், பதவியேற்ற போது, 'கிடங்கில் உள்ள குப்பை 2022க்குள் அகற்றி, 10 தளங்களை கொண்ட 1,000 குடியிருப்புகள் கட்டி, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும்' என, அறிவித்தார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை அதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
தஞ்சாவூர் பா.ஜ., பிரசார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது:
கடந்த 2018ல் பயோமைனிங் முறையில், 2.30 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக அந்த நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி, 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது.
மனு தாக்கல்
அதன் பின், புதிய நிறுவனத்திற்கு 2022 ஆகஸ்டில், 1.56 கன மீட்டர் குப்பையை பிரிக்க, 10.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், புதிய ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும், 5,000 கனமீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, 10.60 கோடி ரூபாய் பில் தொகையை எடுத்துக்கொண்டனர்.
அதற்கு, 8,328 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளனர். இயந்திரங்கள் பழுதாகிய நிலையில், இதுவரை சீர் செய்யவில்லை. இது மிகப்பெரிய மோசடி.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரிக்க வேண்டும் என அளித்த மனுவில், நகராட்சி நிர்வாக இயக்குனரகம் பதில் அளிப்பதாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக விரைந்து விசாரிக்க வேண்டும் என, மீண்டும் புதிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன்.
இப்படி தான் 2014ம் ஆண்டு 440 யூனிட் மின்சாரம் தயாரிப்பு மூலம் 600 மின்விளக்கு எரிய ஏற்பாடு, குழிகளில் குப்பையை புதைக்கும் திட்டம் என, எல்லாம் திட்டமிடல் இல்லாமல் முடங்கியது. தற்போது 12 மண்டலங்களில் குப்பையை பிரிப்பதாக கூறுகின்றனர். ஆனால், குப்பை எரிக்கப்பட்டு தான் அழிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

