sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மறுக்கும் டாக்டர்கள் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல'

/

'அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மறுக்கும் டாக்டர்கள் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல'

'அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மறுக்கும் டாக்டர்கள் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல'

'அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மறுக்கும் டாக்டர்கள் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல'


ADDED : ஏப் 27, 2024 02:38 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. மாணவர் சேர்க்கையின் போது, இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது. மாணவர்களும், இதுதொடர்பாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதத்தின்படி, இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில்,தாங்கள் ஆற்றிய பணியையும் கணக்கில் எடுத்து கொண்டு, பணியில் இருந்து விடுவிப்பதோடு, சான்றிதழ்களை திரும்ப தரக்கோரி, சென்னை ஸ்டான்லி, செங்கல்பட்டு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சென்னை மருத்துவ கல்லுாரிகளில் டாக்டர்களாக பணிபுரியும் சஹானா பிரியங்கா, பாரத்ஜி பாபு, அம்பிகா ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது,'கொரோனா பொது முடக்க காலத்தில் பணிபுரிந்த டாக்டர்களின் கோரிக்கையை, இந்த நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. எனவே, கொரோனா பொது முடக்க காலத்தில் பணிபுரிந்த நாட்களையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், 'கொரோனா பொதுமுடக்க காலம் என்பது அவசர காலம். இதுபோன்ற நேரத்தில், மருத்துவ மேற்படிப்பு படிப்பு படிப்பவர்களும், அவசர காலத்தில் பணிபுரிய வேண்டும். இவர்களுக்கு அரசு சலுகை வழங்குவதாக தெரிவிக்கவில்லை. மருத்துவ மேற்படிப்பு படிக்கும் அனைவருக்கும், மாதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மருத்துவ மேற்படிப்பு படிப்பவர்கள் அனைவரும் தகுதிபெற்ற, பதிவு செய்த டாக்டர்கள் ஆவர். மருத்துவ மேற்படிப்பில் சேரும் போது, அதில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து நன்கு படித்தறிந்து பின் தான், உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். எனவே, பயிற்சி காலத்தை குறைக்க வேண்டும் என, சலுகை கோர முடியாது. மேற்படிப்பு படிக்கும் டாக்டர்களுக்கு, பெரும் தொகையை அரசு செலவிடுகிறது. மருத்துவ தொழில் ஒரு உன்னதமான தொழில்.

அத்தகைய டாக்டர்களின் நடத்தை, மருத்துவ கவுன்சில்மற்றும் அரசால் உருவாக்கப்பட்ட விதிகளுக்கு உடன்பட்டு இருக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் பெரும் தொகை, மருத்துவ மேற்படிப்பு படிப்பவர்களுக்கு செலவிடப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது, படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மறுப்பது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை மக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் செயல்.

டாக்டர்களின் இந்த அணுகுமுறையை அனுமதிக்கும்பட்சத்தில், ஏழை மக்களை கவனிக்காத மனப்பான்மையை ஊக்குவிக்கும்; பொது நலனுக்கு எதிராகவும் அமையும். டாக்டர்களின் இதுபோன்ற செயல் பாராட்டத்தக்கதல்ல. எனவே, நியமன உத்தரவின்படி பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us