ADDED : ஜூலை 11, 2024 11:19 PM
சென்னை:சென்னை வந்த அதானி குழும தலைவர் கவுதம் அதானி, தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக, தமிழக அரசின் உயர் மட்டத்தினருடன் ஆலோசனை நடத்திஉள்ளார்.
தமிழக அரசு, இந்தாண்டு ஜனவரியில் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதானி குழுமம், 42,768 கோடி ரூபாய் முதலீடு செய்ய, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
சந்திப்பு
இந்நிலையில், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார்.
ஆழ்வார்பேட்டையில் சில மிக முக்கிய நபர்களை சந்தித்து பேசியுள்ளார். முதல்வரையும் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளும் முகமையான, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
அரசு, தனியாருடன் கைகோர்த்து திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு, அரசு நிலம் வழங்கும். கட்டுமான பணிகளை தனியார் நிறுவனம் தன் செலவில் மேற்கொள்ள வேண்டும்.
ஆர்வம்
இத்திட்டத்தை செயல்படுத்தவும், அதானி குழுமம் ஆர்வம் காட்டி வருகிறது.
ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை செயல்படுத்தவும், இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
சென்னை வந்த கவுதம் அதானி, அவை குறித்தும், எண்ணுார் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்தும், ஆலோசனை நடத்தியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

