ஸ்டாலின் விமானத்துக்கு குண்டு மிரட்டல் *வழக்கமானது என்பதால் நிம்மதி
ஸ்டாலின் விமானத்துக்கு குண்டு மிரட்டல் *வழக்கமானது என்பதால் நிம்மதி
ADDED : ஆக 28, 2024 08:19 PM
சென்னை:முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக, நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அப்போது, சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு, இரவு 10:10 மணிக்கு, இ - மெயில் ஒன்று வந்தது.
அதில், 'சென்னையில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. உடனடியாக பயணியரை வெளியேற்றி காப்பாற்றி கொள்ளுங்கள். முதல்வர் ஸ்டாலின் செல்லும் விமானத்தில், மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனங்கள் உள்ளன. விமான நிலைய கழிப்பறையிலும், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முதல்வர் செல்ல இருந்த, 'எமிரேட்ஸ்' விமானம், வழக்கமாக புறப்படும் நேரத்தில், ஒடுபாதையில் புறப்பட்டு சென்றது. இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியோடு, விமான நிலையத்தில், அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
ஆனால், வெடிகுண்டு வைக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் வழக்கமான புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, முதல்வர் சென்ற விமானம் துபாயில் தரையிறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து, வதந்தி என்று உறுதியானதும் நிம்மதி அடைந்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து, விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்துக்கு, இரு மாதங்களில், 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.