பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு வழக்கு ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு வழக்கு ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
ADDED : ஏப் 30, 2024 10:12 PM
சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாளுக்கு, பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில், கோவிந்தராஜ பெருமாளுக்கு என, சன்னிதி உள்ளது.
கோவிந்தராஜ பெருமாளுக்கான விழாக்கள், சடங்குகள் குறித்த பட்டியல், 1920ல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது. கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து, கடந்த பிப்ரவரி 18ல், அறநிலையத் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இணை ஆணையரின் உத்தரவு, கோவில் சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறையில் குறுக்கிடுவது போலாகும். இதை ரத்து செய்ய வேண்டும். நடைமுறையில் இல்லாத ஒரு விழாவை கொண்டாட உத்தரவிடுவதற்கு, இணை ஆணையருக்கு அதிகாரம் இல்லை. எனவே, இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ் ஆஜரானார்.
அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. பிரம்மோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவும், ஏற்கனவே தள்ளுபடி ஆகியுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, 'பிரம்மோற்சவம் எப்போது நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், ''வரும் 20 முதல் 29 வரை நடத்த உள்ளோம்,'' என்றார்.
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கையும் வரும் 10ம் தேதி விரிவாக விசாரிப்பதாக கூறி, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.