விதிமீறல் கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது ஆணையம்
விதிமீறல் கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது ஆணையம்
ADDED : ஆக 15, 2024 12:37 AM
சென்னை:ஈரோடு மாவட்டத்தில், ரியல் எஸ்டேட் சட்ட விதிகளை மீறி செயல்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு, 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், வேப்பம்பாளையம் பகுதியில், 'எஸ் டாட் ஜி ஹவுசிங்' நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், வீடு வாங்க, அசோக் குமார் என்பவர் பணம் செலுத்தினார். குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு குறைபாடுகள் தெரியவந்ததால், அசோக்குமார், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையம், கட்டுமான நிறுவனத்துக்கு அபராதம் விதித்து, 2023 மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீடு, தீர்ப்பாயத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரியல் எஸ்டேட் ஆணைய பொறுப்பு தலைவர் சுனில்குமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
குடியிருப்பு திட்ட குறைபாடுகள் தொடர்பாக, இந்த ஆணையம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாதது உறுதியாகிறது. இந்த நிறுவனம், வழக்கில் சம்பந்தப்பட்ட குடியிருப்பு திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி, ஆணையத்தில் இதுவரை பதிவு செய்யவில்லை.
விதிகளையும், ஆணைய உத்தரவுகளையும் மீறும் வகையிலேயே, நிறுவனம் செயல்படுகிறது. எனவே, ரியல் எஸ்டேட் சட்டப்படி, இந்நிறுவனத்துக்கு, 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகையை, செப்., 30க்குள் கட்டுமான நிறுவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்நிறுவனம் மீது கிரிமினல் புகார் அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.