ADDED : ஆக 26, 2024 04:28 AM
பழனியில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் இரு நாட்கள் நடந்த முத்தமிழ் முருகன் மாநாடு, முருகா கோஷங்களுடன் நேற்று நிறைவு பெற்றது.
பழனியில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரையோடு துவங்கிய இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் சார்பில் 1,300 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பக்தர்கள், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
'யாமிருக்க பயமேன்'
இங்கு அறுபடை வீடுகளின் மூலவர் உருவங்கள், முருகனின் 3டி புகைப்பட கண்காட்சி, விர்சுவல் ரியாலிட்டி காட்சியில் முருகனின் பெருமை பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மாநாட்டை காண தமிழகம் முழுதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வெளி நாட்டவர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இரண்டா-வது நாளான நேற்று காலை இசைமணி வெங்கடேச ஓதுவார் குழுவினரின் தீந்தமிழ் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள், தொடர்ந்து டி.எம்.சவுந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். பால்ராஜின் இறைவணக்க பாடலுடன் மாநாடு துவங்கியது.
திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி வரவேற்றார். அமைச்சர் சக்கரபாணி தொடக்கவுரையாற்றினார். மாநாட்டின் விழா மலரை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வெளியிட, கவுமார மட ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.
'யாமிருக்க பயமேன்' என்ற தலைப்பில் மங்கையர்கரசி, யுவகலாபாரதி சுசித்ரா பாலசுப்ரமணியம் சொற்பொழிவு, பாடல் நிகழ்ச்சி, நித்யஸ்ரீ மகாதேவன் குழு சார்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கந்தன் காவடிச்சிந்து, மயிலாட்டம், காவடிஆட்டம், கரகாட்டம், பரதநாட்டியம் என, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மாலை, அமைச்சர் உதயநிதி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில் 'எவரும் ஏத்தும் ஏந்தல்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
16 பேருக்கு விருது
தொடர்ந்து 'காலத்தை வென்ற கந்தன்' என்ற தலைப்பில் வேல்முருகன், முத்துசிற்பி, முகேஷ், மாலதி லட்சுமணன் ஆகியோர் பாடினர்.
இரவு 7:00 மணிக்கு மாநாடு நிறைவு விழா நடந்தது. திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர்.
சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிகம், இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 16 பேருக்கு விருது வழங்கப்பட்டது. 21 தீர்மானங்கள் நிறைவேற்ற, பக்தர்களின் முருகா கோஷங்களுடன் மாநாடு நிறைவு பெற்றது.