அண்ணன் இறந்த அடுத்த நாளில் தம்பியும் டூவீலர் விபத்தில் பலி
அண்ணன் இறந்த அடுத்த நாளில் தம்பியும் டூவீலர் விபத்தில் பலி
ADDED : மே 20, 2024 12:50 AM

நரிக்குடி: நரிக்குடி அகத்தாகுளத்தைச் சேர்ந்த அண்ணன் கார்த்திக் இறந்த சோகம் மறைவதற்குள், தம்பி சிவா டூ வீலர் விபத்தில் பலியானார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அகத்தாகுளத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன்கள் கார்த்திக் 27, சிவா 19. கார்த்திக்கு மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளது. சமையல் வேலை செய்து வந்தார். சிவா தேங்காய் கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் கார்த்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். நேற்று இறுதிச் சடங்கு செய்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு சிவா டூவீலரில் நரிக்குடியில் இருந்து திருச்சுழி நோக்கி சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. சத்திரம் நிழற்குடை அருகே சென்ற போது, முன்னால் சென்ற வத்திராயிருப்பு மேல கோபாலபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி 24, டூ வீலரில் சிவா மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சிவா பலியானார். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர். அண்ணனும் தம்பியும் அடுத்தடுத்த நாள் இறந்ததால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

