மருத்துவமனை ஓ.பி., சீட்டில் விரைவில் தமிழில் நோயாளி பெயர் எழுதப்படும் மருத்துவ கல்வி இயக்குனர் உறுதி
மருத்துவமனை ஓ.பி., சீட்டில் விரைவில் தமிழில் நோயாளி பெயர் எழுதப்படும் மருத்துவ கல்வி இயக்குனர் உறுதி
ADDED : ஜூன் 04, 2024 01:27 AM

மதுரை: ''தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகளின் பெயரை ஓ.பி., சீட்டில் தமிழில் டைப் செய்ய பரிந்துரைக்கப்படும்,'' என, மதுரை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய வந்த மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் சங்குமணி தெரிவித்தார்.
இங்குள்ள மருந்தக வார்டில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை அவர் சரி பார்த்தார். அகச்சுரப்பியல் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கான 'தைராய்டு' மாத்திரைகளை முழுமையாக பாட்டிலில் வழங்கவும், மாத்திரைக்கான காகிதப் பையில், 'உணவுக்கு முன்; உணவுக்குப் பின்' என எழுதித்தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
புறநோயாளிகள் சிகிச்சைக்கு வரும் போது கம்ப்யூட்டரில் தரப்படும் ஓ.பி., சீட்டில் நோயாளியின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இனிமேல் தமிழில் டைப் செய்து வழங்க அறிவுறுத்தப்படும்.
நோயாளிகள், அவர்களது உறவினர்களுக்குரிய மரியாதை வழங்க வேண்டியது நம் கடமை. அனைத்து டீன்களும் ஓ.பி., சீட்டு, உணவுச்சீட்டு வழங்கும் இடத்திற்கு சென்று, அந்த பணியாளர்கள் நோயாளிகளை மரியாதையுடன் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.